உள்ளத்து ஓசை

Monday, August 09, 2004

கனவுலகம்-7

இதுவரை அவன் கணினி வரைகலை எப்படி இருக்கும்/இயங்கும் என்று யூகித்திருந்தானோ அப்படியே இருந்தது. ஆச்சயம் தாளவில்லை அவனுக்கு, தன்னம்பிக்கை நிறைய வளர்ந்த நாள் அது.

அப்போது கணினிவரைகலைத்தொழில் ஒரு சிலரின் பிடியிலிருந்தது அவர்கள் யாருக்கும் கற்றுத்தருவதை, போட்டியை உருவாக்குவதாக நினைக்கிறார்கள் என்று உணர்ந்துகொண்டான்.

பின்னர் பயிலகத்தில் விரிவுரையாளர்களுக்கு நடந்த ஆட்டோ கேட் (Auto CAD) பயிற்சிப்பட்டறையில் பார்வையாளனாக அனுமதி பெற்று கலந்துகொண்டான். நுணுக்கங்கள் விளங்கின, கலை கைவந்தது.

பெயிண்ட் நிறுவனத்தில் பணியைத்தொடர்ந்துகொண்டிருந்தான், ஆனால் அதில் அவனுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கவில்லை. கணினி வரைகலையை (Computer Graphics) பகுதி நேரத்தொழிலாக கைக்கொள்ள முனைந்தான்.

அப்போது மிகுந்த வாக்குசாதுரியம் உள்ள ஒருவனை எதேச்சையாக சந்தித்தான், இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஈர்க்கவே, சேர்ந்து தொழில் தொடங்க முடிவு செய்தனர். அவனுடைய தந்தையும் அவன் வேலையை விட அனுமதிதார்.

வெளிவேலைகளையும் நிர்வாகத்தையும் அவனுடைய பங்காளி செய்வதாகவும், கணினிவரைகலைப்பணிகளையும், வகுப்புக்களையும் அவன் செய்வதாகவும் முடிவாயிற்று. ஆம் இந்தக்கலை ஆர்வமுள்ள அனைவருக்கும் கற்பிக்கப்படவேண்டும் என்று அவன் விரும்பினான். ஆட்கள் பணிக்கு சேர்க்கப்பட்டனர், நிறுவனம் துவங்கியது.

இரண்டாண்டுகள் கழிந்தன, வியாபாரம் அவ்வளவு வளரவில்லை. முதல்மட்டும் கரைந்துகொண்டே இருந்தது, மிகவும் தாமதமாகத்தான் தன் பங்காளியின் குணத்தையும் பணம் மாயமான காரணத்தையும் அறிந்துகொண்டான்.

தொழில் நுட்பத்தில் 'நுட்பம்' மட்டுமே தனக்கு கைவந்திருக்கிறது 'தொழில்' தனக்கு சுத்தமாக தெரியவில்லை என்றும் உணர்ந்தான்

மிகவும் தாமதமாகிவிட்டது, பங்காளி ஏகத்துக்கும் ஏமாற்றி பலரிடம் கடன் வாங்கியிருந்தான், அத்துடன் ஒருநாள் ஓடிவிடக்கூடும் அதன்பிறகு அவன் நிலை? தந்தையுடன் கலந்தாலோசித்தான், தன்னுடைய முதலீட்டையும், இரண்டு வருட உழைப்பையும் இழந்தால் கூட சமாளிக்க முடியும் ஆனால் அந்தப்பெருங்கடனில் மூழ்கிவிட்டால் பின்னர் எழவே முடியாது என்பதை அவர்கள் வெகுவாக உணர்ந்தனர்.

எல்லாவற்றையும் உதறினான், பங்காளியால் பலமாக மிரட்டப்பட்டான், ஆயினும் ஒரு வழியாக வெளியேறினான். மனது கனத்தது, வலித்தது. பின்னர் பங்காளிமீது வழக்குத்தொடர்ந்தான், பங்காளி ஊரைவிட்டு ஓடிவிட்டதால் அந்த வழக்கில் அவனுக்கு பலனேதும் கிட்டவில்லை. அதற்குப்பதிலாக அந்த நிறுவனத்தின் பங்குதாரன் என்ற முறையில் அவனை வேறு வழக்குகள் மிரட்டின.

தந்தையின் வெகுநாள் சேமிப்பை கரைத்துவிட்ட வருத்தமும், வெகுளித்தனத்தால் விளைந்த ஏமாற்றமும் அவனை துடிதுடிக்க வைத்தது.

இவ்விஷயங்களை மனதைவிட்டு அகற்றாவிடில் அவை அவனைக்கொல்லும் என்று உணர்ந்தான். அடங்கு அடங்கு உனக்குள் நீ அடங்கு என்று மனதுக்கு ஆணையிட்டான். இது இன்னும் ஒரு கூட்டுப்புழுப்பருவம், என்தாயின் கருவறைக்குள் எப்படி ஒடுங்கிக்கிடந்தேனோ அப்படி மனம் ஒடுங்குவேன், உள்ளுக்குள் வளர்வேன், மீண்டும் வருவேன், மீண்டு வருவேன் என்று மனதுக்குள் உருவேற்றினான்.

ஆறுமாதம் அவன் கணினியும் தானுமாக மூழ்கினான், மேலும் நுட்பம் பயின்றான். பின்னர் மெல்ல மீளத்துவங்கினான். தனியே தொழில் துவங்கினான். இப்போதும் அவன் தன் லட்சியத்தை அடைந்துவிட்டதாக நினைக்கவில்லை. அதை நோக்கிய பயணத்திலிருப்பதே அவனுக்கு ஆத்மதிருப்தியை கொடுத்து வருகிறது.

சிறுசிறு சம்பவங்களும் வாய்ப்புக்களும் ஒருவனுடைய வாழ்க்கைப்பாதையை எப்படியெல்லாம் மாற்றிவிடுகின்றன, பார்த்தீர்களா?

உதாரணத்துக்காக ஒரு மாமேதையின் வரலாற்றை நான் எடுத்துக்கொள்ளவில்லை நம்மிடையே உலவும் சாமானியன் ஒருவனுடைய வாழ்க்கையைத்தான் சொல்லியிருக்கிறேன்.

உங்களுடைய வாழ்வையே எடுத்துக்கொள்ளுங்களேன், எத்தனை திருப்பங்களை சந்தித்திருக்கிறீர்கள், எவ்வளவு தூரம் கடந்திருக்கிறீர்கள்!

சரியான சந்தர்ப்பத்தில் சரியான வாய்ப்பு மட்டும் கிடைத்திருந்தால் என் வாழ்க்கை எவ்வளவோ மகிழ்சிகரமாக இருந்திருக்கும் என்று நீங்கள் நினைத்ததில்லையா?

அனிமேஷன் எனப்படும் அசைபடக்கலையின் அடிப்படைகளை எளிதில் புரிந்து பயிலும் வண்ணம் ஒரு செயலியை நம் தமிழ் சமுதாயத்திற்காக உருவாக்கியுள்ளேன். அது எவர் வாழ்விலேனும் திருப்புமுனையாய் அமையுமெனில் அதுவே இப்பிறவியெடுத்ததின் பயனாய் எண்ணி மகிழ்வேன்.

சிங்கையின் சுதந்திர தினமான இன்று அதை வெளியிடுவதில் மகிழ்சி கொள்கிறேன்.

சுட்டி: http://www.shockwave-india.com/tamil/kanavulagam/

இச்செயலியை பயன்படுத்த உங்களுக்கு பயிற்சியேதும் தேவைப்படாது என்று நினைக்கிறேன். உங்களுக்கு புரிந்தபின் உங்களால் இயன்ற அளவு இதை சிறார்களுக்கும் சொல்லிக்கொடுங்கள்.

மேலும் ஒரு விளக்கக்கட்டுரையோடு மீண்டும் வருகிறேன்

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி!

கனவுலகம்-6

தன் சிந்தனைக்கும் உண்மைக்கும் இடையே இருந்த இடைவெளியை உணரத்துவங்கினான் அவன். புதிதாக சேர்ந்திருந்த வேதியல் தொழிற்சாலையில் வாழ்வியல் பாடம் படிக்கத்துவங்கினான், சுகாதாரமற்ற வேலையிடமும், சுயநலம்பிடித்த புறம்பேசும் மனிதர்கள் நிறைந்த அந்தச்சூழலும் அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. வேலையில் ஆர்வமும் அவனுக்கு இல்லை அதனால் நல்ல பேரும் அவனுக்கு கிடைக்கவில்லை.

ஆயினும் தோல்வியடைந்தவனாக தந்தையின் முன் நிற்க அவனுக்கு விருப்பமில்லாததால் எப்படியோ தாக்குப்பிடித்தான். நாளுக்குநாள் அவனுடைய பொறுமை நலிந்துகொண்டே வந்தது. கிட்டத்தட்ட பொறுமையை முற்றாக இழந்துவிட்ட ஒரு நாள் அவனுக்கு பெயிண்ட் தயாரிக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து நேர்காணலுக்கான அழைப்பு வந்தது. சிறப்பாக அவன் கேள்விகளுக்கு பதில் சொன்னதால் வேலையும் கிடைத்தது. அங்கே மனிதர்களைப்பொருத்தவரை ஆரோக்கியமான சூழல் நிலவியது.

மாதவனிடம் அவன் பேசிக்கொண்டிருந்தபோது அதைக்கேட்டுக்கொண்டிருந்தவர் வேறுயாருமல்ல கணித விரிவுரையாளராக பணியாற்றிய அவனுடைய தந்தைதான்.

அவர் கேட்டதோடு நில்லாமல் தன் சகாக்களிடம் வெறும் கணினியை மட்டும் வைத்துக்கொண்டு கற்றுக்கொள்ள முடியுமா என்று ஆலோசனையும் கேட்டார், அவர்களும் நம்பிக்கை தெரிவிக்க. மகனுக்காக ஒரு கணினிக்கு முன்பணம் செலுத்திவிட்டு அவனிடம் சொன்னார். அவனுக்கு மகிழ்சியாலும் நன்றியாலும் கண்கள் பனித்தன.

80286 வகை கணியான அதை வாங்க அவர்களுக்கு ஆன செலவு ரூபாய் 38,500 அவன் நினைத்ததுபோல 12,000 அல்ல. கணினி கைக்குக்கிடைத்த சில நாட்களில் பயிலகத்துக்கு சென்றான் தன்னுடைய தாய கட்ட விளையாட்டை தொடர்வது அவனுடைய எண்ணம், ஆனால் அவனுடைய வட்டிலிருந்த தகவல்களை அவர்கள் ஏற்கனவே அழித்து விட்டார்கள், அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்ன தெரியுமா? மற்றவர்களுடைய வட்டில் நிறைய வெற்றிடம் இருந்ததால் அப்படியே பயன்படுத்த முடிந்தது ஆனால் உன்னுடையது நிறைந்திருந்தது.

அதன்பின் அவனுக்கு தாய கட்டவிளையாட்டை வடிவமைப்பதில் ஆர்வம் போய்விட்டது ஆனால் கணினி ஆர்வம் தீயாய் பற்றிக்கொண்டது.

நான்கு வண்ணங்கள் மட்டுமே ஒரு நேரம் திரையில் காட்ட முடிந்த அந்த திரையில் அவன் கணினி வரைகலையின் அடிப்படையை பயின்றான்.

திரையில் அவன் காட்டிய அசைவுப்படங்களைப்பார்ந்த ஒருவன் தன்னுடைய கேபிள் டிவிக்காக அவற்றை ஒளிநாடாவில் பதிவுசெய்துதரமுடிமா என்று கேட்ட கேள்வி அவனை கணினி வரைகலையைப்பற்றி மேலும் அறிந்துகொள்ளத்தூண்டியது.

அப்பாவின் சகா ஒருவர் அவனை ஒரு கிராபிக்ஸ் ஸ்டுடியோவுக்கு அழைத்துச்சென்றார். அவர்களிடம் அவன் கேட்டது இதுதான், நான் ஏற்கனவே பணியில் இருப்பதால் என்னால் முழுநேரம் இங்கே வரமுடியாது, தினமும் மாலை வருகிறேன், எனக்கு சம்பளம் தரவேண்டாம், ஒரு தேனீர் வழங்கும் பையனாக என்னை பயன்படுத்திக்கொள்ளுங்கள், இங்கே உள்ள கணினிகளை துடைப்பதற்கல்லாமல் வேறெதற்கும் உங்கள் அனுமதியின்றி தொடமாட்டேன். நீங்கள் வேலைசெய்யும்போது திரையைப்பார்க்க அனுமதித்தால் போதும்.

வேற்றுலக ஜந்துவுக்கான பார்வையை வழங்கியவர்கள் அதற்கெல்லாம் இங்கே ஏற்கனவே ஆள் இருக்கிறது என்று மறுத்துவிட்டார்கள். அவன் கேட்டவிதமே அவர்களை பயமுறுத்தியிருக்கவேண்டும்.

சிலிகன் கிராபிக்ஸ் நிறுவனத்தினர் ஒரு அறிமுகவிழாவை ஒரு நட்சத்திர விடுதியில் நடத்தியபோது அவனுக்கும் ஒரு அனுமதி சீட்டை சம்பாதித்துக்கொண்ட அவனுக்கு அவர்களுடைய எடுத்துக்காட்டுக்களைப் பார்த்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

(தொடரும்)

கனவுலகம்-5

அந்த ஆச்சரியம் ஏற்பட அவனுக்கு நண்பனும் எதிரியுமாக(?!) ஏற்கனவே அறிமுகமாயிருந்த மாதவனும் ஒரு காரணம். அவர்கள் எப்போதும் ஒன்றாகவே இருந்தார்கள், எதிரெதிராக விவாதித்தபடி. இவன் சொல்லும் எந்த கருத்துக்கும் எதிர் கருத்தோடு தயாராக இருப்பான் மாதவன். மணிக்கணக்காக நீண்டு செல்லும் இத்தகைய விவாதங்கள் இவன் தன் கருத்துக்களை வலுப்படுத்திக்கொள்ள உதவின.

பாடதிட்டத்தில் இல்லாதபோதும் தன்னுடைய சொந்த முயற்சியாலும் ஆர்வத்தாலும் கணினிகளை தருவித்திருந்த பயிலக முதல்வர் திரு.இராமன், அவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்த விழைந்தார்.

ஐந்து நபர் குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்த வகுப்பினரிடையே இரு குழுக்களுக்கு மட்டுமே கணினி பயில தகுதி அடிப்படையில் வாய்ப்பு. மாதவன் படிப்பாளியாக இருந்ததால் அவனோடு சேர்த்து இணைபிரியாத இவனுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மின்னியியல் போலின்றி கணினியில் கைமேல் பலன் உடனடியாக, அவன் மின்னியியலை விட்டுவிட்டு மின்னியியலின் வளர்ச்சியால் விளைந்த கணினியை பற்றிக்கொண்டான்.

மாதவன் வெகுதொலைவிலிருந்து பேருந்தில் வருவதால் வகுப்பை தவறவிடாமல் இருக்க சீக்கிரமே வந்துவிடுவான். முதல்வரும் சீக்கிரமே வந்துவிடுவதால் கணினி அறையை திறந்து மாதவனுக்கு மேலும் நாலு கட்டளைகளை சொல்லித்தந்துவிடுவார். அதை வைத்துக்கொண்டு மாதவன் செய்யும் அட்டகாசம் இவனால் தாங்க முடியாது.

"இதொ பாரு உனக்கு டைப்பிங்கும் தெரியாது, கமாண்டுங்களும் தெரியாது. பேசாமெ பக்கத்துல உக்காந்து உன் புரொக்கிராம படி! நான்தான் டைப் செய்வேன்", என்று அடம் பிடித்தான். இதனால் மேலும் தூண்டப்பெற்ற இவன், தானும் அதிகாலையில் வரத்துவங்கினான்.

இருவரும் வகுப்பில்லாத ஒவ்வொரு இடைவேளையிலும் கணினி அறையில் தவம் கிடந்து ஜிடபிள்யூ பேசிக் (GW Basic) எனும் கணினிமொழி பயின்றனர். இப்படி கிடைத்த உபரி நேரத்தை மேலும் பயன்படுத்திக்கொள்ள நினைத்த இவன் தாய விளையாட்டை கணினியில் புகுத்த முடிவுசெய்தான். அவர்களின் விவாதம் தொடங்கியது.

"இரண்டு பேர் தாயம் விளையாடுற மாதிரி செய்யணும், தாயக்கட்டையை உருட்டுறதுக்கு பதிலா கம்ப்பூட்டர் ரேண்டம் நம்பர் ஜனரேட் பண்ணும், எந்த காயை நகர்த்தணும்னு சொன்னால் அதுவே நகர்த்தும்", கற்றுக்கொண்ட கட்டளைகளை செயல்படுத்திப்பார்க்கும் ஆர்வத்துடன் இவன்.

"அய்யே! ரண்டு பேர் வெளையாட நான் தரையில கட்டம் போட்டே விளையாடிடுவேன். கம்ப்யூட்டர்னா அதுவும் விளையாடணும், அதுதான் விளையாட்டு", பதிலுக்கு மாதவன்

அப்படியே செய்வதாக உறுதி எடுத்துக்கொண்டு மேலும் சிந்திக்கும் போது சில விஷயங்கள் அவனுக்கு புரிந்தது. மிக எளிமையானதாக தென்படும் தாயக்கட்டம் கூட, 'உண்டு', 'இல்லை' என்று உடைத்துச்சொன்னால் மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய கணினியில் புகுத்துவது அவ்வளவு சுலபம் இல்லை. நாம் விளையாடும் பொழுது எப்படி வேண்டுமானால் விளையாடலாம் ஆனால் கணினி விளையாடினால் அதன் ஒவ்வோர் அசைவும் மிகச்சரியாக இருக்கவேண்டுமல்லவா. உதாரணத்துக்கு கீழ்கண்ட சிக்கலை எடுத்துக்கொள்வோம்

நம்மிடமுள்ள நான்கு காய்களில் இப்போது விழுந்துள்ள எண்ணைக்கொண்டு ஒன்றை வெட்டுப்படாமலிருக்க மலை சேர்க்கலாம், இன்னொன்று தன் சுற்றை முடித்துக்கொள்ள முடியும், மற்றொன்று எதிராளியின் காயை வெட்டமுடியும், அடுத்தது வெட்டுப்படும் வாய்ப்பிலுள்ளது என்று வைத்துக்கொள்ளுவோம்.

எது சிறந்த நகர்த்தல் என்பதை எப்படி முடிவு செய்வது? எதற்கு முக்கியத்துவம் தருவது?

ஒவ்வொன்றிக்கும் ஒரு முக்கியத்துவ எண் கணிக்கப்படவேண்டும். எப்படி கணிப்பது?

மலை சேர்க்க வாய்ப்புள்ள காய் தன் சுற்றில் எவ்வளவு பயணித்துள்ளது? இன்னும் எதிராளியின் எத்தனை நகர்த்தல்களில் அது வெட்டுப்பட வாய்ப்பு உள்ளது?

சுற்றை முடிக்க முடிந்த காய் வெட்டுபட வாய்ப்புள்ளதா அல்லது அதைவிட முக்கியமான நகர்த்தல் வேறேதும் உள்ளதா?

எதிராளியின் காயை வெட்ட இயலுமாயின் அது தன் பாதையில் எவ்வளவு தூரம் கடந்துள்ளது? அதிகம் கடந்திருத்தால் எதிராளிக்கு ஏற்படும் இழப்பு அதிகம் எனவே அதிக முக்கியத்துவம் தரப்படவேண்டும்

இப்படி இச்சிக்கலை பல சிறு துண்டுகளாக உடைத்து கையாளலாம்.

எடுத்துக்கொண்ட இப்பணியை ஒரு அறுபது சதம் முடிக்க மட்டுமே பயிற்சிக்காலம் அனுமதித்தது. பின்னர் அவர்கள் வெவ்வேறு தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி பெற செல்ல வேண்டியிருந்தது.

அதற்கு முன் ஒரு நாள் அவன் உணவு இடைவேளையின் போது மாதவனிடம் சொன்னான், "டிரெயினிங் முடிஞ்சு ஒரு வருசத்துல வேலைக்கு சேர்ந்திடணும், மாதம் ஆயிரம் ரூபாயாவது சம்பளம் கிடைக்கும் அதை அப்படியே சேர்த்து வைக்கணும். ஒரு வருஷம் அப்படி சேத்தா 12 ஆயிரம் கெடைக்கும், அந்த 12 ஆயிரத்துக்கெல்லாம் கம்ப்பூட்டர் வாங்க முடியும்னு சொல்றாங்க, எனக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கணும்".

ஆர்வத்தோடு அவன் சொல்லிக்கொண்டிருத்ததை வேறொருவர் தற்செயலாக கவனித்து கேட்டதையும் அதன் விளைவுகளையும் அப்போது அவன் அறியவில்லை.

(தொடரும்)

கனவுலகம்-4

வால்வுகள் முற்றாக வழக்கொழிந்துவிடவில்லை. இன்றைய தொலைக்காட்சியில் பிம்பத்தை காண்பிப்பதும் picture tube ஒரு வால்வு தான்.

சாதிக்கும் வெறி மட்டும் போதுமா? அதற்குரிய பொறுமை வேண்டாமா. அவனிடம் இல்லாதது அதுதான், செய்யத்துவங்கிய செயலின் பலன் உடனடியாக கிட்டவேண்டும் என்று விரும்பினான்.
மின்னியியலில்(electronics) அது செல்லுபடியாகவில்லை. சிறு வானோலி ஒன்று அமைக்கும் முயற்சியில் அவனுக்கு தோல்விதான். அந்த தோல்வி அவனை மீண்டும் மீண்டும் முயற்சிக்க தூண்டி தன்னுடைய துறையாக அவனை மின்னியியலை தேர்ந்தெடுக்க வைத்தது

இந்த வாய்ப்பை அவன் பத்தாவது படிக்கும்போது அவனுடைய தந்தை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

"நீ மட்டும் இறுதித்தேர்வில் 400க்கு மேல் மதிப்பெண் (மொத்த மதிப்பெண் 500) எடுத்தால் உன்னை மின்னியியல் படிக்கவைக்கிறேன்", என்று உறுதியளித்தார்.

அதே நேரம் தலைமையாசிரியரும், "நீ 400க்கு மேலே மார்க் எடுப்பியா? உன்னாலே முடியாதுடா! சான்சே இல்லை", என்று அடிக்கடி உசுப்பிவிட்டார்.

அவனுடைய கவனம் முழுவதும் படிப்பின் பக்கம் திரும்பியது. நன்றாக தேர்வு எழுதி முடித்தபின் விடுமுறையில் ரேடியோ டிரான்சிஸ்டர், டேப்ரெக்கார்டர் சரி செய்யும் செயல்முறை வகுப்பில் சேர்ந்து பயின்றான்.

எதிர்பார்த்த மதிப்பெண்ணும் வந்தது.

அவனுடைய தந்தை அழைத்துப்பேசினார், "இப்ப எலெக்டிரானிக்ஸ் படிச்சா வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா இல்லை, ஆனா கெமிக்கல் படிச்சவங்க எல்லோரும் கேம்பஸ் இண்டர்வியூவிலேயே செலக்ட் ஆகறதை பாத்திருக்கேன், வாழ்க்கையில செட்டில் ஆகிறது முக்கியம். உன்னோட ஆர்வத்தையெல்லாம் சைடு டிராக்லெ வைச்சுக்கோ".

அப்பாவின் வாதத்தில் உள்ள நியாயந்தை உணர்ந்தவன் அரை மனதாக சம்மதித்து வேதியல் தொழில் நுட்பம் பயிலத்தொடங்கினான்.

முதல் வருடம் ஆர்வமில்லாததாலும், ஆங்கிலமுறைக்கல்விக்கு மாற்றப்பட்டதாலும் சராசரிக்கும் கீழாகவே இருந்தான்.

ஆர்வமின்றி ஆரம்பித்த இரண்டாம் வருடத்தில் அவனுக்கு ஓர் ஆச்சரியம் காத்திருந்தது.

(தொடரும்)

கனவுலகம்-3

"வால்வுகள்" எனும் அப்புத்தகம் மின்னியலிலிருந்து மின்னணுவியல்(electronics) கிளர்த்தெழுந்த வரலாறை விவரித்தது.

மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டபின் தொடர்ந்த ஆராய்ச்சி வால்வுகளின் கண்டுப்பிடிப்புக்கு அடிகோலியது.

ஒரு சிறு வேறுபாடிருந்தால் அதை பெரிதுபடுத்துவதென்பது மனித குலத்துக்கு புதிதன்று. அதனால் தீமை மட்டுமே விளையும் என கண்டிருந்தார்கள்

வால்வுகளை பயன்படுத்தி சிறு மின் அதிர்வுகளை பெரிதுபடுத்த முடிந்தது. அதைக்கொண்டு சிறிய ஓசைகளை பெரிதுபடுத்தும் ஒலிப்பெருக்கிகள், வானோலி போன்றவை ஏற்படுத்தப்பட்டன.

பரிட்சை நேரத்தில் பக்கத்து வீட்டில் அலறும் ஒலிப்பெருக்கிகளால் பாதிக்கப்பட்டோர் அவைகளால் விளைவது தீமையே என்று அப்போதைக்கு சொன்னாலும் நன்மைகளை உணராமல் இல்லை

வால்வுகளின் நிகழ்ந்த ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நேரில் பார்ப்பது போல வெகு அழகாக விவரிக்கப்பட்டிருந்தது. அவன் ஆவலோடு மொத்த புத்தகத்தையும் சீக்கிரமே படித்து முடித்துவிட்டான்.

"இப்படி ஒவ்வொரு கண்டுபிடிப்பும் நிகழ்ந்தவிதம் உள்பட விவரிக்கப்படும்போது எவ்வளவு ஆர்வத்தை தூண்டுவதாக அமைகிறது. நம் அறிவியல் பாடங்கள் ஏன் இத்தனை ஈர்ப்பதாக இல்லை?", என சிந்தித்தான்.

தானும் ஒரு கண்டுபிடிப்பாளனாக வேண்டும் எனும் எண்ணம் வலுப்பெற்றது. மேலும் இதுபோன்ற புத்தகங்களை தேடிப்படிக்க துவங்கினான். மின்னணுவியல் அவனை மெல்ல ஈர்த்தது.

படித்தவற்றை நேரில் காணும் ஆவல் மிக, வீட்டில் சிறு கோளாறுகளுடன் இயங்கிக்கொண்டிருந்த பழைய வானொலியை பிரித்து ஊமையாக்கினான், அத்துடன் நில்லாமல் உறவினர் மற்றும் நண்பர்கள் வீட்டில் அரைகுறையாக இயங்கிக்கொண்டிருந்த மின்னணு சாதனங்களை முடிந்தவரை நிரந்தரமாக நிறுத்தினான். அதிஷ்டவசமாக அவற்றில் சில வேலை செய்ததால் தொடர்ந்து பிரித்துப்பார்க்க ஏதாவது கிடைத்தபடி இருந்தது.

"நீதாண்டா சரிபார்க்கணும்", என்று வந்ததெல்லாம் கைதேர்ந்த பழுதுபார்க்கும் நிபுணர்கள் கைவிரித்த பின்புதான் அவனை அடைந்தன என்பதை வெகுநாட்கள் கழித்துதான் தெரிந்துகொண்டான்.

இதுவரை மற்றவர்கள் தன்மீது வைக்கும் நம்பிக்கையின் உதவியால் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டவனுக்கு தன்னை வேறு விதமாகவும் தூண்ட முடியும் என்று ஒன்பதாம் வகுப்பில் பாடம் நடத்த வந்த தலைமையாசிரியர் புரிய வைத்தார்.

வாயில் என்னேரமும் வெற்றிலை குதப்பியபடி எச்சில் தெறிக்க பேசும் அவர். ஒரு மாணவனிடம் கேள்வி கேட்டு பதில் வராவிட்டால் வாயிலிட்டு நன்கு உளப்பிய விரல்களைக்கொண்டு கன்னத்தை கிள்ளுவார், வலியோடு அருவருப்பும் சேர்ந்துகொள்ள மாணவனின் முகம் அஷ்டகோணலாவதை ரசிப்பார். தடியடி நடத்துவதிலும் பெயர் பெற்றவர் என்பதால் மாணவர்கள் சற்று நடுக்கத்துடனே அவர் வகுப்பை எதிர்கொள்வர்.

அவருக்கு ஏனோ அவனை பிடித்துவிட்டது. அதன் விளைவாக சரியாக பதில் சொன்னாலும் அவன் கன்னம் கிள்ளப்பட்டது, என்ன கொஞ்சம் வலிக்காதபடி கிள்ளுவார் வேறுபாடு அவ்வளவுதான். அவனை சீண்டுவது அவருக்கு பேரானந்தம். இவனுடைய மின்னணுவியல் திறமை(?!) பற்றி கேள்விப்பட்ட அவர் ஒருநாள் அவனை அழைத்து பேசினார், "உன்னால ரிப்பேர்தான் செய்ய முடியும், ஒரு முழு ரேடியோவை நீயே அசெம்பிள் செஞ்சு பாடவைக்க முடியுமா?"

"சார்! கண்டிப்பா முடியும்", தன்னம்பிக்கை சிகரமாக இவன்.

"டேய், அதெல்லாம் ஒன்னும் முடியாதுடா!", மீண்டும் மீண்டும் சொன்னார்.

இவனுக்குள் சாதித்துகாட்டும் வெறி தீயாய் பற்றிக்கொண்டது.

அப்புறம் அந்த வால்வுகளுக்கு என்னதான் ஆயிற்று? பழங்கால வானொலிகளில் இடம் பெற்றிருந்த வால்வுகளின் இடத்தை பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட டிரான்ஸிஸ்டர்கள் பிடித்துக்கொண்டன. ஏனெனில் அவை குறைவான வெப்பத்தை வெளியிட்டதொடு, குறைவான மின்சாரத்திலேயே இயங்கின.

அப்படியானால் வால்வுகள் அழிந்தே போயினவா? இன்றைய பயன்பாட்டில் அவை இல்லவே இல்லையா?

(தொடரும்)

கனவுலகம்-2

எந்தப்பள்ளியில் அவன் படிப்பு கெடும் என்று சொல்லப்பட்டதோ அந்த அரசுப்பள்ளியில்தான் அவனுடைய படிப்பு பலப்பட்டது.

அவன் இதுவரை படித்த பள்ளியின் பெருமைகளும், அவனின் தோற்றமும், சிறந்த படிப்பாளி எனும் பிம்பத்தை சகமாணவர்களிடையே ஏற்படுத்தியது. முதல் இரு நிலைகளில் உள்ள மாணவர்கள் தங்கள் இடத்துக்கு ஏதும் ஊறு நேர்ந்துவிடுமோ என்று அனாவசியமாக பயந்தனர்.

அங்கே அவனை கண்டிக்கவும் தண்டிக்கவும் ஆள் இல்லை. மாறாக அவன் நன்றாக படிப்பான் என நம்பினர், அந்த நம்பிக்கையை வார்த்தைகளிலும் வெளிப்படுத்தினர். இறுக்கமற்ற இந்த புதிய சூழலும் தன் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையும் அவனை மாற்றின. நம்பிக்கையை மீண்டும் ஒரு முறை உடைக்க அவன் தயாரில்லை அந்த வலியை உணர்ந்திருந்ததால் தன்னை தகுதியானவனாய் மாற்றிக்கொள்ள முற்பட்டான்.

அறிவியல் ஆசிரியைக்கு அவனை மிகவும் பிடித்துவிட்டது, அதனால் அறிவியல் பாடத்தை முதல் நாளே படித்துவிட்டு கேள்விகளுக்கு தயாராக வகுப்புக்கு செல்வான். ராக்கெட் பற்றிய பாடம் என்றால் ஊதுபத்தி அட்டையில் ஒரு ராக்கெட் மாதிரி செய்து வகுப்புக்கு எடுத்துச்செல்வான். இப்படியே அறிவியல் மெல்ல புரிபடவும் ஆர்வமூட்டவும் ஆரம்பித்தது.

இந்த கால கட்டத்தில் அவனுடைய தந்தை அவனுக்கு நூலகத்தை அறிமுகப்படுத்த, சிறுவர் கதைகளை ஆர்வமுடன் படிக்க துவங்கினான். வாண்டுமாமாவின் கதைகள், தெனாலிராமன் கதைகள், நீதிக்கதைகள், பீர்பால் கதைகள், மாயாஜாலக்கதைகள் என அவன் பட்டியல் நீண்டது.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் அவன் தந்தை அவனை நூலகத்திற்கு அழைத்துச்சென்றார். இம்முறை வழக்கம் போல சிறுவர் பகுதியில் புத்தகம் எடுக்காமல் வேறு ஏதாவது புத்தகம் எடுக்க அவன் விரும்பினான். அவ்வளவு பெரிய நூலகத்தில் தான் படிக்கும் கதைகள் அல்லாமல் வேறு என்னவகை புத்தகங்கள் இருக்கும் என பார்க்க நினைத்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக புத்தகங்களை உருவினான் அவை ஆர்வமூட்டாதவையாகவோ புரியாதவையாகவோ இருந்தன. அவனை ஈர்த்தது, "வால்வுகள்" எனும் புத்தக தலைப்பு. அவனுக்கு தெரிந்ததென்னவோ சைக்கிள், டயர், டியூப், அந்த டியூபிலுள்ள வால்வுதான். இதைப்பற்றி இவ்வளவு பெரிய புத்தகமா? என்னதான் இருக்கிறதென்று படித்துவிடுவது என முடிவு செய்துகொண்டான்.

அதற்கும் சிறுவயதில் தனக்கு ஆர்வமூட்டிய கார்ட்டூன் படங்களுக்கும் தொடர்பு இருக்கும் என அவனால் சிறிதளவும் ஊகிக்க இயலவில்லை

(தொடரும்)

கனவுலகம்-1

கோபம் கோபமாக வந்தது அந்த சிறுவனுக்கு

"தூர்தர்ஷனுக்கு ஒரு சோப்பு பிடிச்சிருந்தா அதை மட்டும் வாங்கிக்க சொல்லலாமே! அதை விட்டுட்டு ஆயிரம் சோப்பைக்காட்டி இது இப்டி சிறந்தது, அது அப்டி சிறந்ததுன்னு மாத்தி மாத்தி சொல்லி ஏன் குழப்பறாங்க?", விளம்பரத்தின் விளக்கம் புரியாதவன் தந்தையிடம் கேட்டான்.

தந்தை மென்மையாக சிரித்தார். காலப்போக்கில் அவனே புரிந்துகொள்வான் என நினைத்தவர், பதிலேதும் கூற வில்லை.

ஆனாலும் அவனுக்கு அவரே வழிகாட்டி, jungle book படத்துக்கு அழைத்துச்சொன்ற போது, கார்ட்டூன் படங்கள் தாள்களின் வினாடிக்கு 24 படங்களாக அசைவு மாற்றங்களை வரைந்து தயாரிக்கப்படுகிறது என்று விளக்கினார். "அம்மாடி! இந்தனை படம் வரைந்தால், வரைபவருக்கு கை வலிக்காதா", என்று அப்போது அவன் நினைத்துக்கொண்டான்.

ஆர்வமுடன் அவனை star wars படங்களுக்கு அழைத்துச்சென்றார். கதையேதும் புரியாதபோதும், கண்கள் மின்ன, லேசர் கத்திகளின் வீச்சையும் ரோபாட்களையும், வினோத ஜந்துக்களையும் வியப்போடு பார்த்தான். அவை அவன் கற்பனையிலும் தொடர்ந்தன.

ஐந்தாம் வகுப்பு பள்ளி அறை, பக்கத்தில் அமர்ந்திருந்த வகுப்புதோழி பெருமை பொங்க கையில் வைத்திருந்த சிறு புத்தகத்தை மின்னலாய் காட்டிவிட்டு மறைத்துக்கொள்கிறாள்

"ஏய் மஞ்சு, என்னது அது? ஒழுங்கா காட்டு", என்றவுடன் அவள் புத்தகத்தை வளைந்து பக்கங்களை படபடவென புரட்டி ஓடச்செய்தாள்.

"அய்யோ!", வியப்புதாளாமல் கூவினான், தனித்தனியே பார்க்கும் போது சாதாரண புகைப்படதொகுப்பாய் தென்பட்ட அது புரட்டும் போது திரைப்படம் போல ஓடியது. அப்பாவின் விளக்கம் அன்றுதான் அர்த்தமானது, அடுத்தடுத்த படங்களுக்கிடையே சிறு மாற்றம் இருப்பதை உணர்ந்தான்.

அதன்பிறகு கனமான புத்தகங்களில் வலப்புறம் எழுத்துகளுக்கு பிறகு உள்ள காலியிடங்களை (margin) தனது கார்ட்டூன்களால் நிரப்பினான். துள்ளிகுதிக்கும் பந்து, சுற்றி சுழலும் எழுத்துக்கள், மோதிக்கொள்ளும் கப்பல்கள் என அவனுடைய கார்ட்டூன் பட்டியல், புத்தகங்களில் இடம் உள்ளவரை நீண்டுகொண்டே போனது.

ஆறாம் வகுப்பு இருபாலர் வகுப்பு அல்ல அதன் காரணமாக மஞ்சுளாவை பிரிந்தாலும் அவளால் தூண்டப்பட்ட ஆர்வத்தை பிரியவில்லை.

பொதுவாக அவனுக்கு திணிக்கப்படும் எதுவும் பிடிப்பதில்லை, ஆனால் அங்கே எல்லா ஆசிரியர்களும் திணிப்புமுறையிலேயே கல்விபுகட்டினர் ஒரே ஒருவர் தவிர, அவர் ஓவிய ஆசிரியர். எந்த வீட்டுப்பாடத்தையும் ஒழுங்காக செய்ய மறுக்கும் அவன் ஓவியங்களை மட்டும் ஒழுங்காக வரைந்துவிடுவதால் அவரின் அன்புக்கு பாத்திரமானான். படிப்பிலும் பண்பிலும் சிறந்த மாணவன் அவன் என அவர் நினைத்தார். அத்தோடு விட்டிருக்கலாம், அதை ஒருநாள் வகுப்பில், "மாணவன்னா இவனைப்போல இருக்கணும் எப்படி எல்லா விசயத்திலும் சரியாக நடந்துகொள்கிறான் பார்", என்று சொல்லவும் செய்தார்.

வகுப்பறையே கொல்லென சிரித்துவிட்டது. "சார், அவன் ஒழுங்கா வீட்டுப்பாடம் செய்யாமல் ஒவ்வொருமுறையும் அடிவாங்குவான் சார், அவன் ஒழுங்காக இருக்கறது உங்க கிளாஸ்ல மட்டுந்தான்", என ஒரு மாணவன் எழுந்து நின்று பொறுமையாய் விளக்க, முகம் தொங்க நின்ற அவனின் பிம்பம் மனதில் நொறுங்க, அவர் பார்த்த பரிதாபப்பார்வையை அவன் ஆயுளுக்கும் மறக்கமாட்டான்.

புதிதாக வேறு பகுதியில் வீடுகட்டுவதால் அதற்கருகில் உள்ள பள்ளியில் அவனை 7ஆம் வகுப்பு சேர்த்துவிட முடிவு செய்த தந்தை TC வாங்குவதற்காக தலைமை ஆசிரியரை சந்தித்து பேசினார். சிறந்ததென பெயரெடுத்த இந்த பள்ளியை விட்டு அருகிலுள்ள காரணத்தால் ஏன் அரசுப்பள்ளியில் சேர்கிறீர்கள், இதனால் அவன் படிப்பு கெடுமே என வினவிய தலைமை ஆசிரியரை சமாதனப்படுத்தி ஒரு வழியாக சம்மதம் பெற்றுக்கொண்டார்.

அந்தப்பள்ளியில் கடைசி நாள், அங்கே எதுவுமே பிடிக்காவிட்டாலும் அந்த ஓவிய ஆசிரியருக்காக அவன் அப்பள்ளியை நேசித்தான்.

முகப்பு தோற்றத்தை அப்படியே பென்சில் கொண்டு ஓவியமாய் வரைந்துகொண்டான், அவனுள் ஏனோ பொங்கிய துக்கம், அவ்வொவியத்திற்கு இரண்டு கண்ணீர் புள்ளிகளை பரிசாக வழங்கியது

(தொடரும்)