உள்ளத்து ஓசை

Thursday, September 30, 2004

அ.பு.பயிற்சி-3: மரபணு

அந்த ஆய்வுக்கூடத்தின் கூண்டுக்குள்ளே மலங்க மலங்க விழித்துகொண்டிருந்தது நான்கே மாதமான அந்தக் குழந்தை. கூண்டுக்கு வெளியே நின்றவர்கள் அதைச் சுட்டி எதேனும் பேசியபோதெல்லாம் கெக்கெ பிக்கே என்று சிரித்து மயக்க முயன்றது. அவர்கள் அதையெல்லாம் கண்டுகொள்ளும் நிலையில் இல்லை. மிகத்தீவிரமான ஆலோசனையில் இருந்தார்கள். தலைமை விஞ்ஞானி டேவிட்சன் எரிச்சல் நிறைந்த குரலில் முழங்கினார்.

"மனித குலத்துக்கு எவ்வளவு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறோம், நமக்கு ஆதரவும் நிதி உதவியும் செய்யாவிட்டால் போகட்டும், இப்படி படிப்படியாக தடைகளை கொண்டு வராமல் இருந்தாலே போதுமே! ஊர்வனவற்றிக்கு இருக்கும் விஷேச குணத்தை பாருங்கள்! நாம் சாமானியமாக கருதும் பல்லி இழந்துவிட்ட வாலை மீண்டும் புதுப்பித்துக் கொள்கிறது, இப்படி அழிந்துபோன உறுப்பை மீண்டும் வளர்த்துக்கொள்ள அவற்றின் மரபணு அமைப்பே காரணம். இதே மாதிரியான மரபணு மாற்றத்தை மனிதனுக்கும் ஏற்படுத்தும் இந்த ஆராய்ச்சி மட்டும் வெற்றி பெற்றால் விபத்தில் கை, கால்களை இழப்போர் கவலை இன்றி ஓய்வெடுக்கலாம், கொஞ்ச காலத்தில் மீண்டும் கைகால் முளைத்துவிடும். இப்படியெல்லாம் எடுத்துச்சொல்லியும் அந்த மரமண்டைகளுக்கு புரியவில்லையே"

மூத்த விஞ்ஞானி ஜப்பார் டேவிட்சனை தன் கனிவான பார்வையில் சாந்தப்படுத்த முயன்றார்.

"டேவிட்சன், இவர்களின் செயல்பாடுகள் நாம் எதிர்பார்த்ததுதானே. அவர்களிடம் இந்த ஆராய்ச்சி நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்துவிடுங்கள், நாம் தனிப்பட்ட முறையில் தொடர்வோம். அடுத்த நடவடிக்கை என்ன?"

"குளோனிங் முறையில் உயிர்பிக்கப்பட்டு மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்தக் குழந்தை சோதனைக்கு தேவையான அளவு வளர்ந்துவிட்டது, நாளை முதல் முயற்சியாக வலது கை கட்டை விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம்"

இதேதும் அறியாத அந்தக்குழந்தை இன்னும் அவர்களை பார்த்து உற்சாக கூக்குரலிட்டது. அதன் முகத்தை ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் ராஜி.

"ராஜி, அந்தக் குழந்தையுடன் உணர்வு மயமான உறவை வளர்த்துக் கொள்ளாதே, நமது ஆராய்ச்சிக்கு அது நல்லதல்ல", இறுகிய முகத்துடன் எச்சரித்தார் டேவிட்சன்.

* * * * * * * * * * * * * * * * * *

இனி இந்தக்கதையை எப்படி தொடரப்போகிறீர்கள்? குழந்தைக்கு என்ன ஆகப்போகிறது?

Wednesday, September 29, 2004

அ.பு.பயிற்சி-2: நுண்ணுணர்வு

என் பெயர் அனந்த ராமன், ராமன் பெயரில் மட்டுமே. குஷாலாக என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இந்த குட்டி எனக்கு ரயில் பயணத்தில் வழித்துணை மட்டுமே. மதராஸிலிருந்து டெல்லிக்கு போக நாற்பத்தைந்து நிமிடம் ஆகிறதே, அவ்வளவு நேரம் சும்மா இருக்க முடியுமோ! இறுக்கமான அணைப்பு, அழுத்தமான முத்தம், சில தடவல்கள் அவ்வளவுதான். ஊர் வந்துவிட்டால் நான் வேறு அவள் வேறு. இப்போதெல்லாம் பரவாயில்லை, இந்த அதிவேக ரயில் சேவை வருவதற்கு முன்பெல்லாம் டெல்லி போக இரண்டரை மணி நேரம் ஆகும், அவசரம் என்றால் விமானமோ ஹெலிபேடோ பிடித்து போக வேண்டியதுதான். எனக்கு அந்தப் பயணமே பிடிப்பதில்லை.

மின் காந்தங்களின் உதவியால் காற்றில் மிதப்பது போல பறக்கும் இந்த நவீன ரயிலை தான் தான் புழக்கத்துக்கு கொண்டு வந்தது என்று சொல்லியே ரயில்வே மந்திரி இரண்டாம் முறையாக பதவியை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த சாதனையில் எனக்கும் பங்குண்டு. ஆளில்லாமல் இயங்கும் இந்த ரயில்வண்டியினை இயக்கும் ஆணைத்தொடர்களில் சிலவற்றை நானும் எழுதியிருக்கிறேன்.

தொடர்ச்சியாக யோசிக்கவிடாமல் தொடைமீது கையை பட்டுப்பட்டென்று போடுகிறாள், எனக்கு ஜிவ்வென்று ஆகிவிடுகிறது. இந்த ஜீன்ஸ் பேண்டில் பாக்கெட் எதற்கு வைக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? என்னுடைய உடலின் உணர்வு முடிச்சுக்கள் அத்தனையும் இவளுக்கு அத்துப்படி. இப்படித்தான் ஒருமுறை ஏடாகூடமாகி ஆபிசுக்கு போகாமல் படகு வீட்டை வாடகைக்கு எடுக்க வேண்டியிருந்தது.

என் மனைவியெல்லாம் எனக்கு ஒரே மாதத்தில் அலுத்துவிட்டாள், இன்னும் தொடர்பில் இருக்கும் மற்ற ஆறு பெண்களைவிட இவள் அதிகம் அலுப்படிக்காமல் இருக்கிறாள். ஒரு வீணையை கையாளும் லாகவம் இவளின் செயலில் இருக்கிறது. வீணை என்றதும் நினைவுக்கு வருகிறது எனக்கு இந்த ஒலி லயங்களை ரசிக்க பிடிக்கும். கண்ணாடி சில்லுகள் போன்ற வடிவத்தில் சுவரோடு சுவராக பொருந்தி நிற்கும் இருபத்தி ஏழு ஸ்பீக்கர்கள் கொண்ட புத்தம் புதிய ஒலி அமைப்பை பொருத்தியிருக்கிறேன், வின்சைல் ஹவாண்டியின் பீட்டில்ஸ் அதில் கேட்க வேண்டுமே, அடாடா! அப்படியே சொக்கி விடுவீர்கள். எனக்கு ஒலியில் துளி கூட பிசிறு இருக்கக்கூடாது. இங்கே சன்னமாக கேட்கும் உராய்வு ஒலி கூட என் காதுகளுக்கு தப்ப முடியாது. எதிரே இருந்த திரையில் மேற்கத்திய இசைத்தொகுப்பிலிருந்து ஒரு பாடல் சோகையாக வழிந்து கொண்டிருந்தது. இந்த ஒலி வேறு, இது தனியே கேட்கிறது.

என் உடலில் ஊர்ந்த அவளின் விரல்களை பிடித்து நிறுத்தினேன், எதிரே லஜ்ஜை கெட்டத்தனமாக எங்களையே வெறித்துக்கொண்டிருந்த இரண்டுங்கெட்டான் வயசுக்காரனால் கூட என் கவனத்தை திசை திருப்ப முடியவில்லை. என் மனதில் 'உராய்வே இல்லாமல் இயங்கும் இந்த ரயிலில் உராய்வு ஓசை எங்கிருந்து, ஏன், எப்படி வருகிறது', என்ற கேள்வியே சுற்றி சுற்றி ஓடியது.

பெங்களூரில் ரயில் நின்றபோது இன்னொரு மாறுபாட்டை கவனித்தேன். ரயில், நிலையத்தில் நிற்கும் போது, நிலையத்தில் உள்ள கதவுகளும் ரயிலில் உள்ள கதவுகளும் ஒரு சேரத்திறந்து பயணிகள் உள்நுழைய, வெளியேற வழி விடவேண்டும். இம்முறை நிலையக்கதவுகள் திறந்து சிறிது காலம் கழித்தே உட்கதவு சற்று சிரமத்துடன் திறந்தது, "கதவுகள் மூடப்படப்போகின்றன, தயவு செய்து இடையில் நிற்கவேண்டாம், கதவுகள் மு", என்று ஒலித்த அறிவிப்பு சில கிலோஹெர்ட்ஸ் வித்யாசத்தில் பெண்மையிழந்து ஆண்மையின் கனத்துடன் ஒலித்தது. தவிர இரண்டாம் முறை இந்த அறிவிப்பு அரைகுறையாக ஒலிக்க அவசியமில்லை.

வேறு யாரும் இதைப்பொருட்படுத்துவதாக தெரியவில்லை. ஆணைத்தொடரின் மூலத்தை பார்த்தவன் என்ற முறையில் என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்,இது இயல்பான செயல்பாடு இல்லை ஏதோ விபரீதம் இருக்கிறது! என்னுடைய அதிர்ச்சியை கூட்டும் விதத்தில் ரயில் ஒரு உலுக்கு உலுக்கியது, என்ன தான் நடக்கிறது?

* * * * * * * * * * * * * * * * * *

இனி இதை எப்படி தொடரப் போகிறீர்கள்?

Tuesday, September 28, 2004

அ.பு.பயிற்சி-1: அதிர்வுகள்

இந்த உலகம் அழகானது, அதே நேரத்தில் அசிங்கமானதும் கூட என்கிறார்கள். நான் இனிமேல்தான் பார்க்கவேண்டும், இன்னும் சற்று நேரத்தில் கட்டு அவிழ்க்கப் போகிறார்கள். இதோ டாக்டர் கூட வந்துவிட்டார்.

"மாலினி, சற்று நேரத்தில் உன் கண் கட்டை அவிழ்க்கப் போகிறேன். உன் விழிகளை மெல்லத்திறந்து ஒளியை உள்ளே கசியவிடு. சற்று உறுத்தலாக இருக்கும், பிறகு சரியாகிவிடும். அதிக உறுத்தல் இருந்தால் சொல்"

பாட்டி பக்கத்தில் இருக்கிறார், எதிர்வீட்டுப் பெண்ணும் வந்திருப்பதை ஒலியால் உணர்கிறேன். கட்டு நீங்கியதும் என் விழித்திரையை மெல்ல விலக்கினேன். இத்தனைநாள் நான் பார்த்த இருட்டை புரட்டிப்போட்டாற்போல ஒளி, என் கண்ணே பொசுங்கிவிடும்போல, சூரீர் என்று ஒரு வலி. தாங்கமுடியாமல் போகவே விழியை மூடிக்கொண்டேன்.

"எல்லாருக்கும் முதல் முறையே வெற்றி கிடைத்துவிடுவதில்லை, இருபது வருடமாக இருட்டையே உணர்ந்திருந்த மூளை இந்த தகவல்களை வாங்கி உணர சற்று காலம் தேவைப்படுகிறது, சில மருந்துகள் தருகிறேன் மீண்டும் நாளை முயற்சிப்போம்"

டாக்டர் அகன்று விட்டார், நடையொலி மெல்லத்தேய்ந்து அடங்கிவிட்டது. நான் நர்சின் உதவியுடன் படுக்கைக்கு திரும்பினேன். பக்கத்துப்படுக்கையில் மார்கரெட் ஆன்டி இன்னும் அனத்திக்கொண்டிருந்தார். நோயின் தாக்கம் அதிகமாகிவிட்டது போலும். அவர் என்னிடம் பேசியதில்லை, அவருடைய மகள் வரும்போதெல்லாம் என்னையும் விசாரிக்காமல் போனதில்லை.

பாட்டி இன்று வீட்டுக்குப் போய்விட்டாள். பல சிந்தனைக்கள், ஒளியில்லாக் கனவுகள், நேரம் நீண்டுகொண்டே போவது போல இருந்தது, பின்னர் ஒரு வழியாக உறங்கினேன்.

ஆஸ்பத்ரியின் ஆரவாரம் சுத்தமாக இல்லை, நள்ளிரவாக இருக்கலாம். எனக்கு தூக்கம் கலைந்துவிட்டது. இருள் மட்டுமே இருந்ததால் அவிழ்ந்து போன கட்டை கழற்றி என் கண்களை திறக்க முயற்சித்தேன். இப்போது உறுத்தல் இல்லை, கண்களில் விடப்பட்ட திரவங்கள் காரணமாக இருக்கலாம். வழக்கத்துக்கு மாறாக மார்கரெட் ஆன்டியின் குறட்டை ஒலியோ முனகலோ இல்லை. அறையின் வாயிலில் வழியும் ஒளியை தடுத்தபடி ஒரு உருவம் மங்கலாக தெளிவற்று தெரிந்தது. ஒலிகளால் ஏதும் உணர முடியவில்லை.

"யாரது?"

பதிலில்லை, நான் சற்று நெருங்கி தொட்டு உணர முயன்றேன். அருகில் செல்லச் செல்ல விலகுவதுபோல இருந்தது, சன்னமான நடையொலி அறையின் இன்னொரு புறம் கேட்கிறது, ம்... எனக்கு தெரியும் இது மார்கரெட் ஆன்டியின் நடை. சற்று இழுந்தாற்போல நடப்பார். ஒலி என்னை சற்று நெருங்கியது. கலங்கலாக அவர் உருவத்தை முதல் முறையாக பார்க்கிறேன்.

"எப்படி இருக்கிறது உடம்பு?", என்றேன்

"குளிர்கிறது", என்றார் தடுமாற்றமான குரலில், பின்னர் என்னை கடந்து நீள தாழ்வாரத்தில் காணாமல் போனார்.

நான் அறைக்கு திரும்பி உறக்கத்தை தொடர்ந்தேன். காலையில் உறக்கம் கலைந்த போது, சந்தடி வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. என்னுடைய கட்டை இறுக்கிய நர்சின் நர்சின் கைகளை பிடித்துக்கொண்டேன்.

"நேற்று இரவு மார்கரெட் ஆன்டியை பார்க்க வந்தது யார்?"

"இரவில் விசிட்டர்களுக்கு அனுமதியில்லை என்று உனக்கு தெரியாதா?"

"இல்லை, அவருடன் ஆன்டியும் போனார்கள். அதனால் தான் கேட்கிறேன்"

"வாய்ப்பே இல்லை, நேற்று நள்ளிரவில் ஆன்டி இறந்துவிட்டார்"

* * * * * * * * * * * * * * * * * *

இந்த இடத்திலிருந்து இதை ஒரு பேய்க்கதையாக தொடர்வது எளிது

ஆனால் அறிவியல் புனைகதையாக தொடரவேண்டும்

எப்படி தொடரப்போகிறீர்கள்?

அறிவியற் புனைகதைப் பயிற்சி

வரப்போகும் போட்டியில் கலக்கப்போகும் அனைவருக்கும் என் வரவேற்பும் வாழ்த்துக்களும். அறிவியற் புனைகதைகளைப் பொருத்தவரை முழுக்கதையும் மனதுக்குள் உருவாகியபின் நிறைவைத்தரும் கதைகளை மட்டுமே எழுதுவது என்று ஒரு கொள்கை வைத்திருந்தேன். அதன்படித்தான் எழுதியும் வந்தேன். ஒரு கதை தன்னைத்தானே எழுதிக்கொண்டு போகவேண்டும் என்று அனுபவஸ்தர்கள் சொல்லும்போது என்னால் வியப்பில் ஆழ மட்டுமே முடிந்தது. முடிவை யோசிக்காமல் துவக்கப்படும் கதைகள் சுவாரஸ்யம் அளிக்குமா? நிறைவான உணர்வு தருமா? என்கிற சந்தேகம் தொடர்ந்தது.

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம என்பார்கள். நான் அறிவியல் புனைகதை எழுத பயிற்சியாக சில ஆரம்பங்களை மட்டும் எழுதிப் பார்த்தேன். அவற்றை எழுதத் துவங்கும்போது முடிவைப் பற்றி துளியும் சிந்திக்காமல் எழுதினேன். பின்னர் படித்தபோது சுவாரஸ்யமாய் அவற்றை தொடர பல யோசனைகள் கிடைத்தன. மரத்தடியில் அவைகளை இட்டு மற்றவர்களை தொடரச்சொன்னேன், சுவாரஸ்யமான பல இழைகள் உருவாயின. அதை இங்கேயும் தொடர விருப்பம். நான் சில ஆரம்பங்ளை இடுகிறேன் அவற்றை நீங்கள் (ஆம்! நீங்களேதான்) தொடருங்கள். நான் உணர்ந்த சில உண்மைகளை நீங்களும் கண்டுணர்வீர்கள்.

இந்தப்பயிற்சி எனக்கும் உங்களும் மிகுந்த பயனளிக்கும் என்று நம்புகிறேன். உங்களின் ஆர்வத்தை பின்னூட்டாக தெரியப்படுத்தினால் ஊக்கம் பெறுவேன்.

விரைவில் முதல் கதையின் ஆரம்பத்தோடு உங்களை சந்திக்கிறேன்.

அறிவியற் புனைகதைகள்

எல்லா கண்டுபிடிப்புக்களும் கற்பனையாலும், இயற்கையைப் பற்றிய புரிதலாலுமே நிகழ்கின்றன. அறிவியல் புனைகதைகள் கண்டுபிடிப்புக்கு வெகு அருகாமையில் இருப்பதாக உணர்கிறேன். இரண்டுமே கற்பனையில்தான் துவங்குகின்றன.

இப்போது அறிவியற் புனைகதைகளுக்கு சற்று வரவேற்பான சூழ்நிலை நிலவுகிறது. திண்ணையும் மரத்தடியும் இணைந்து நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி ஒரு புதிய அத்தியாயத்தை துவக்கும் என்று நம்பலாம்.

எனக்கு புனைகதைகள் படிக்கவும், எழுதவும் மிகவும் பிடிக்கும். வலைப்பூவில் பெயரிலி சொன்னது போல என்னுடைய முதல் அறிவியற் புனைகதையின் இரண்டாம் பதிப்பை இன்று வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிறேன்.

என்னுடைய பாதுகாவல் சிறுகதையின் இரண்டாம் பதிப்பை இங்கே படிக்கலாம்.